சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதல்; 7 வயது சிறுவன் சாவு
|சிக்கமகளூருவில் தறிகெட்டு ஓடிய அரசு பஸ் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் 7 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூருவில் தறிகெட்டு ஓடிய அரசு பஸ் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் 7 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ் விபத்து
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிவமொக்காைவ நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அரசு பஸ் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பெட்டதஹள்ளி பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்து கூச்சலிட்டனர்.
இந்தநிைலயில் டிரைவர் பஸ்சை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தறிகெட்டு ஓடிய பஸ் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுதவிர 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்து குறித்து தரிகெரே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த சிறுவன் துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்த பிரமோத் (வயது7) என்று தெரியவந்தது. படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிவமொக்காவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.