அரசு வக்கீல்கள், வழக்குகளில் அலட்சியம் காட்டக்கூடாது
|அரசு வக்கீல்கள், வழக்குகளில் அலட்சியம் காட்டக்கூடாது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
ஏழைகளுக்கு நியாயம்
சட்டம் மற்றும் மனித உரிைமைகள் துறை சார்பில் அரசு வழக்குகள் நிர்வாக கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு அந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அரசு வக்கீல்கள், அரசு வழக்குகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அரசு வழக்குகள் என்றால் அது மக்கள் சார்ந்த வழக்குகள் என்று அர்த்தம். மக்களுக்கு நீதி கிடைக்கும் தன்மை இன்னும் அதிகரிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு மேல் கோர்ட்டுக்கு செல்லும் சக்தி இருப்பது இல்லை. ஏழைகளுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் அரசு வக்கீல் நியமனத்தால் பயன் இல்லை.
தோல்வி அடையும்
வழக்குகளை சரியான, திறமையான முறையில் நடத்துவது அவசியம். இதில் அலட்சியம் காட்டினால் அனைத்து நிலைகளிலும் வழக்கு தோல்வி அடையும். அதனால் அரசு வக்கீல்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அரசு வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் சரியாக பணியாற்றாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். வழக்கு எத்தகையதாக இருந்தாலும் அதை தீவிரமாக கருதி செயலாற்ற வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் தான் நமக்கு சலுகைகள் கிடைக்கின்றன.
சில நீதிபதிகள் முகத்தை பார்த்து செயல்படுகிறார்கள் என்ற பேச்சு மக்களிடையே உள்ளது. இதை அனைவரும் சேர்ந்து அழிக்க வேண்டும். தேவையின்றி வாய்தா வாங்கக்கூடாது. குற்ற வழக்குகளில் தவறு செய்தோருக்கு ஜாமீன் வழங்குவதை தீவிரமாக எதிர்க்க வேண்டும். அங்கு தான் உங்களின் தகுதி என்னவென்று தெரியும். கோர்ட்டு அவமதிப்பு ஏற்படாமல் நீங்கள் வக்கீல் தொழிலை செய்ய வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல், அரசு வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.