பாரத ரத்னா அமிதாப் பச்சனை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; மம்தா பானர்ஜி
|மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் இன்றும் (ஆகஸ்டு 31), நாளையும் (செப்டம்பர் 1) எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த சந்திப்பை நடத்துகின்றன.
இதில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மும்பை நகருக்கு சென்றார். அவரை தனது வீட்டுக்கு வரும்படி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான பிக் பி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனையேற்று மம்தா அவருடைய வீட்டுக்கு சென்றார்.
இதன்பின்னர், அமிதாப் பச்சன், அவருடைய மனைவி ஜெயா பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யா பச்சன், சுவேதா பச்சன் மற்றும் நவ்யா நவேலி நந்தா உள்ளிட்ட அனைவருடனும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த சந்திப்பு பற்றி, செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில், மும்பைக்கு பல முறை நான் வந்திருக்கிறேன். ஆனால், பாரத ரத்னா அமிதாப் பச்சனை சந்திக்கும் வாய்ப்பு முதன்முறையாக எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த குடும்பத்தின் மீது நான் அன்பு செலுத்துகிறேன். இந்தியாவில் அவர்கள் நம்பர் ஒன் குடும்பம். அவர்கள் நாட்டுக்காக பெரும் பங்காற்றியுள்ளனர். அவர் ஒரு ஜாம்பவான். அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் நாங்கள் மதிக்கிறோம். நானும் அவரை துர்கா பூஜை மற்றும் சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன் என பேசியுள்ளார்.