மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது
|ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
லக்னோ,
மியான்மரில் இருந்து நேற்று பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு தங்க கட்டிகள் கடத்தி வருவதாக வாரணாசி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி அதிரடி சோதனை நடத்தினர். பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் ரெயில் நிலையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில் ரெயிலின் எச்-1 பெட்டியில் பயணம் செய்த இருவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால். அவர்களை சோதனை செய்த போது மராட்டியத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 51), தமிழகத்தைச் சேர்ந்த அமித் (வயது 24) ஆகியவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 தங்க கட்டிகளை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.