< Back
தேசிய செய்திகள்
நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்:  கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்: கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
26 Feb 2023 11:42 AM IST

நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய விசயம் என சிசோடியாவுடனான சி.பி.ஐ. விசாரணை பற்றி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கும் தொடர்பு உள்ளது என கூறி, அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு, சிசோடியா நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டார்.

இதனை தொடர்ந்து, சிசோடியா சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து சி.பி.ஐ. தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிஷ் சிசோடியா இன்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார். திறந்த நிலையிலான காரில் நின்றபடி சென்ற அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், கடவுள் உங்களுடன் இருக்கிறார் மணிஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆசீர்வாதங்கள் உங்களுடன் உள்ளன. நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய ஒரு விசயம்.

நீங்கள் சிறையில் இருந்து விரைவில் திரும்ப வேண்டும் என கடவுளிடன் நான் வேண்டி கொள்கிறேன். டெல்லியின் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் நாங்கள் எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். உங்கள் குடும்பத்தினரை நாங்கள் பார்த்து கொள்வோம். கவலைப்பட வேண்டாம் சிசோடியா அவர்களே என்றும் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்