அடுத்த தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடைபெறும் - இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
|அடுத்த தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் நிறைவு விழா சூரத்தில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் அடுத்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா நேற்று அறிவித்துள்ளார்.
அடுத்த தேசிய விளையாட்டு போட்டியை நடத்த முழு ஆதரவு அளிப்பதாக கோவா மாநில அரசு அளித்த உறுதியை அடுத்து அந்த மாநிலத்துக்கு போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் போட்டி நடைபெறும் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூரத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் கோவா மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டு போட்டியை நடத்துவதற்கு அடையாளமாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கொடியை பெற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
36-வது தேசிய விளையாட்டு போட்டியை கடந்த 2016-ம் ஆண்டில் நடத்துவதற்கான உரிமையை கோவா பெற்று இருந்தது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 3 முறை தள்ளிபோடப்பட்ட இந்த போட்டி கொரோனா பரவல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் போட்டியை நடத்த இயலாது என்று கோவா கைவிரித்ததால் தான் இந்த போட்டி குஜராத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.