நாட்டின் முதல் மாநிலமாக கோவாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம்: பிரதமர் மோடி பெருமிதம்
|அங்கு அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாக சான்றளிக்கப்பட்டுள்ளது.
பனாஜி,
ஜல் ஜீவன் திட்டம் என்பது மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 அன்று அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே இந்த பணியின் நோக்கமாகும். இதுவரை நாட்டில் 52% க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய பகுதிகள் முறையே நாட்டின் முதல் 'ஹர் கர் ஜல்' சான்றிதழ் பெற்ற மாநிலமாகவும் யூனியன் பிரதேசமாகவும் மாறியுள்ளன,
அங்கு அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாக சான்றளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் உள்ள ஒட்டுமொத்த 2.63 லட்சம் கிராமப்புற குடும்பங்களும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் உள்ள 85,156 குடும்பங்களும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீரைப் பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வயிலாக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
மத்திய அரசின் பிரச்சாரத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில்(7 தசாப்தங்களில்) 3 கோடி கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே குழாய் இணைப்புகள் மூலம் குடிநீரைப் பெற்று வந்தன.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 10 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நாடு மற்றும் குறிப்பாக கோவா இன்று ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.நாட்டின் முதல் 'ஹர் கர் ஜல்' (ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர்) சான்றிதழ் பெற்ற மாநிலமாக கோவா மாறியுள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.