ஞானவாபி வழக்கு; வரும் 26-ந்தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை
|ஞானவாபி வழக்கில் வரும் 26-ந்தேதி வரை தொல்லியல் துறை ஆய்வு நடத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுடெல்லி.
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மத பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் வாரணாசி சிவில் கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனிடையே இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் என்பவர் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதேபோன்று, பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை கடந்த 14-ந்தேதி முடிவடைந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக ஞானவாபி மசூதி நிர்வாகத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூலை 21-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை 'பாதுகாக்கப்பட்ட பகுதி' என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. அதனால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் போலீசார் குழு இன்று காலை சென்றது. இதனை தொடர்ந்து, தொல்லியல் துறையின் ஆய்வும் தொடங்கியது.
இதுபற்றி மனுதாரர்களில் ஒருவரான சோகன் லால் ஆர்யா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எங்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம். கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் இந்து சமூகத்திற்கும் கூட. ஞானவாபி விவகாரத்தில் ஆய்வு செய்வது ஒன்றே சாத்தியப்பட்ட தீர்வாக இருக்கும் என கூறினார்.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுபற்றிய வழக்கை கோர்ட்டு அவசர வழக்காக எடுத்து கொண்டது. இதுபற்றிய விசாரணையில், ஐகோர்ட்டின் உத்தரவை வரும் 26-ந்தேதி மாலை 5 மணி வரை செயல்படுத்த கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கமிட்டி இதுபற்றி மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பற்றி இந்த வழக்கில் இந்து மதத்தினர் தரப்பில் ஆஜரான விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தும்படி கூறிய வாரணாசி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதற்கு எதிராக ஐகோர்ட்டுக்கு எங்களது சட்ட அணி செல்லும். இந்திய தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே ஞானவாபி பற்றிய உண்மையான விசயங்கள் வெளியே வரும். சுப்ரீம் கோர்ட்டின் எந்தவொரு கருத்துரையும் பாதிக்கப்படாமல் இந்த விவகாரம் பற்றி ஐகோர்ட்டு முடிவு செய்யும் என கூறியுள்ளார்.