புவி வெப்பமயமாதலுக்கு பலியாக போகும் கேரளா: 2050க்குள் 4 மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம்
|கடல் மட்டம் உயர்வால் மத்திய கேரளாவின் சில பகுதிகள் அதிக ஆபத்தை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
நியூஜெர்சியை தளமாக கொண்ட க்ளைமேட் சென்ட்ரல் என்ற அறிவியல் அமைப்பு 5 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ள புதிய டிஜிட்டல் எலிவேஷன் மாடல் (DEM) என்ற அறிக்கையில், கடல் மட்டம் உயர்வால் மத்திய கேரளாவின் சில பகுதிகள் அதிக ஆபத்தை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரும் பட்சத்தில் முந்தைய அறிக்கையில் கூறியதை விட மேலும் சில பகுதிகள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
புதிய கணிப்புகளின்படி, கோட்டயம் மற்றும் திருச்சூரின் உள்பகுதிகள் வரை நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
முந்தைய அறிக்கையில், குட்டநாடு, கொச்சித்தீவுகள் மற்றும் வைக்கம் ஆகிய கடலோர பகுதிகளே பெருமளவில் குறிப்பிடப்பட்ட நிலையில், திருச்சூரில் உள்ள பெரமங்கலம், புறநாட்டுக்கரை, அரிம்பூர், பரக்காடு, மணக்கொடி, கூர்கெஞ்சேரி போன்ற உள் பகுதிகளும், கோட்டயத்தில் தலையாழம், செம்மநடுக்கரை, அச்சினகம், பிரம்மமங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளும் சமீபத்திய அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அன்டார்டிகாவில் பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்வது, ஏற்கனவே அசாதாரண மற்றும் தீவிர மழைப்பொழிவை கண்டுவரும் மத்திய கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழாவின் பெரும் பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்களும், திருச்சூரின் சில பகுதிகளும் 2050ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கேரளாவின் அனைத்து கடற்கரைகளும் கடலுக்குள் சென்றுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. முனம்பம், குழிப்பிள்ளி, சேரை, நாயரம்பலம், சேந்தமங்கலம், புத்தன்வேலிக்கரை, கடமக்குடி, புதுவைபே, போர்ட் கொச்சி, வரபுழா, போல்கட்டி, செல்லாணம், உதயனாபுரம், தலையோலப்பறம்பு, சேர்த்தலை, குமரகம், முகம்மா, கொட்டாஞ்சேரி, தன்னி ஆகிய பகுதிகள் முற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கலாம் என்று க்ளைமேட் சென்ட்ரல் அறிக்கை தெரிவிக்கிறது.
2050ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் கணிசமாக உயரும் என்று காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) அறிக்கையை க்ளைமேட் சென்ட்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.
வட இந்திய பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு 1874 முதல் 2004 வரை 1.06-1.75 மி.மீ. என்ற விகிதத்தில் இருந்தது. இது கடந்த 25 ஆண்டுகளில், ஆண்டுக்கு 3 மி.மீ. அதிகமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.