உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
|மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 'அமைதியில் இருந்து செழிப்பிற்கு' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து காலை 10.30 மணியளவில் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்த மாநாடு உத்தரகாண்ட் மாநிலத்தை ஒரு புதிய முதலீட்டு மையமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.