< Back
தேசிய செய்திகள்
மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள்-மத்திய அரசிடம் டி.கே.சிவக்குமார் கோரிக்கை
தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள்-மத்திய அரசிடம் டி.கே.சிவக்குமார் கோரிக்கை

தினத்தந்தி
|
1 July 2023 2:39 AM IST

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக அரசு மேகதாது என்ற புதிய அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது.

மேகதாது அணை திட்டம்

அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இந்த அணை அமைய உள்ளது. பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை போக்கவும், 400 மெகாவாட் நீர்மின்உற்பத்தி செய்யும் வகையில் இந்த அணை கட்டும் திட்டத்தை செயல் படுத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்து, கடந்த கர்நாடக பட்ஜெட்டில் ரூ,1,000 கோடி ஒதுக்கீடு செய்து அப்போதைய பா.ஜனதா அரசு உத்தரவிட்டது.

தமிழ்நாடு எதிர்ப்பு

இதற்கிடையே இந்த மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல்சக்தி துறைக்கும் அனுப்பிவைத்துள்ளது.

ஆனால் இந்த அணை கட்டப்பட்டால், காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படும், காவிரி டெல்டா பகுதிகள் பாசனம் அடியோடு பாதிக்கப்படும் என கூறி தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறது.

மத்திய மந்திரியுடன் சந்திப்பு

இதற்கிடையே தனது சொந்த தொகுதியான கனகபுரா அருகே அமைய உள்ள மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2022-ம் ஆண்டே மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபயணம் நடத்தினர். தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், மாநில நீர்ப்பாசனத் துறையை தன் வசம் வைத்துள்ள டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என அறிவித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரியும், கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற கோரியும் டெல்லியில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

மேகதாது திட்டத்துக்கு அனுமதி

அப்போது அவர் கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களான மேகதாது திட்டம், தென்பெண்ணை ஆறு திட்டம், மகதாயி, கிருஷ்ணா ஆறு திட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும் அவர் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பான கோரிக்கை மனுவை டி.கே.சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் வழங்கினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மேகதாதுவில் 67 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையை கட்ட முடிவு செய்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வழக்கமான நீர் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. நீர் மாதந்தோறும் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு வழங்க தயாராக உள்ளோம். பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்யும் திட்டமிட்டுள்ளோம்.

அனுமதி வழங்கவில்லை

மேகதாது திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு தயாரித்து மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க சட்டத்திலும் இடம் உள்ளது. ஆயினும் மத்திய நீர் ஆணையம் இதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. காவிரி படுகையில் உள்ள மாநிலங்களின் அனுமதியை பெற வேண்டி இருப்பதாக அந்த ஆணையம் கூறியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடைபெற்ற காவிரி நிர்வாக ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் நடுவர் மன்ற தீர்ப்புக்கு உட்பட்டே நிறைவேற்றுவதாக கர்நாடகம் தெளிவாக கூறியுள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு பல்வேறு சட்டவிரோதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கர்நாடகத்தின் அனுமதி

அதாவது, குந்தன் பி.எஸ்.பி., சில்லஹல்லா பி.எஸ்.பி., 2-வது கட்ட ஒகேனக்கல் திட்டம், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற திட்டங்களை தமிழ்நாடு மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தின் அனுமதி பெறாமல் இந்த திட்டங்களை அந்த மாநிலம் செயல்படுத்துகிறது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு அந்த மாநிலம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவாக அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்