பாலியல் தொல்லை கொடுத்ததை பெற்றோரிடம் கூறியதால் சிறுமி, கத்தியால் குத்தி படுகொலை; தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி
|பாலியல் தொல்லை கொடுத்ததை பெற்றோரிடம் கூறியதால் சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பெங்களூரு:
பாலியல் தொல்லை
பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அந்த தனியார் நிறுவனத்தில் அரியானாவை சேர்ந்த நந்தகிஷோர் (வயது 50) என்பவர் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவர் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
அதே குடியிருப்பில் 11 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தகிஷோர், அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்துபோன சிறுமி அங்கிருந்து செல்ல முயன்றாள். அப்போது இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை நந்தகிஷோர் மிரட்டி உள்ளார்.
சிறுமி கொலை
ஆனாலும் வீட்டுக்கு சென்ற சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தனியார் நிறுவனம் நந்த கிஷோரை பணியில் இருந்து நீக்கியது. மேலும் குடியிருப்பில் இருந்து வெளியேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகிஷோர், அந்த சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த நந்தகிஷோர், குடியிருப்புக்கு வந்து சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் அவளை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து நந்தகிஷோர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் வீட்டில் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீசுக்கு பயந்து நந்தகிஷோர், தன்னை தானே கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் குடியிருப்பு அருகே மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை அறிந்த போலீசார், விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்ததை வீட்டில் கூறியதால் சிறுமியை கொன்றுவிட்டு நந்தகிஷோர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.