< Back
தேசிய செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு; அரசியல் லாபத்திற்காக மந்திரியின் மகன் பெயரை எதிர்க்கட்சிகள் இழுக்கின்றன:  பா.ஜ.க. குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்கார வழக்கு; அரசியல் லாபத்திற்காக மந்திரியின் மகன் பெயரை எதிர்க்கட்சிகள் இழுக்கின்றன: பா.ஜ.க. குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
27 Oct 2022 1:00 PM GMT

திரிபுராவில் 16 வயது சிறுமி கும்பல் பலாத்கார வழக்கில் மந்திரியின் மகனுக்கு தொடர்பு இல்லை என பா.ஜ.க. மறுத்து உள்ளது.



அகர்தலா,


திரிபுராவில் உனாகோட்டி மாவட்டத்தில் குமார்காட் பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 19-ந்தேதி தோழியின் அழைப்பின் பேரில் அவர் வைத்த விருந்தில் கலந்து கொள்ள 16 வயது சிறுமி ஒருவர் சென்றுள்ளார்.

அவருக்கு விருந்தின்போது, அறையொன்றுக்கு அழைத்து சென்று குடிக்க ஒரு பானம் கொடுத்து உள்ளனர். இதன்பின்பு, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பப்பியா தேப் என்ற பெண், பப்து தாஸ், ராஜேஷ் மலாக்கர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் பா.ஜ.க. மந்திரி ஒருவரின் மகனும் ஈடுபட்டு உள்ளார் என சி.பி.ஐ.(எம்.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன.

இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது. இதுபற்றி திரிபுரா தகவல் மற்றும் கலாசார விவகார மந்திரி சுஷந்தா சவுத்ரி கூறும்போது, குமார்காட் பகுதியில் ஒரு பலாத்காரம் சம்பவம் நடந்தது. அது நடந்திருக்க கூடாது.

ஆனால், இந்த பலாத்காரம் சம்பவத்தில் சி.பி.ஐ.(எம்.) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களின் கவனம் ஈர்ப்பதற்காக, மந்திரி பகவான் தாஸின் மகனுக்கும் தொடர்பு உள்ளது என கீழ்த்தர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.

இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், மந்திரி பகவான் தாஸின் மகனை கைது செய்யவில்லை. ஏனெனில் சம்பவத்தில் அவர் ஈடுபடவில்லை.

எங்களது கட்சி, மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. மந்திரியின் மகன் 10-ந்தேதியில் இருந்தே சம்பவ பகுதியில் இல்லாமல் வெளியூருக்கு சென்று விட்டார். மக்களை சென்றடைவது எப்படி என தெரியாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மந்திரி மகனுக்கு இதில் தொடர்பு இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்