< Back
தேசிய செய்திகள்
காட்டு யானை தாக்கி பெண் சாவுவனத்துறையினரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்-பரபரப்பு
தேசிய செய்திகள்

காட்டு யானை தாக்கி பெண் சாவுவனத்துறையினரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்-பரபரப்பு

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

விராஜ்பேட்டையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடகு,

விராஜ்பேட்டையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காபி தோட்ட தொழிலாளி

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே மால்தாரே கிராமத்தை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 63). காபி தோட்ட தொழிலாளியான இவர், நேற்று காலை வனப்பகுதியையொட்டி உள்ள காபி தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது ஆயிஷா காபி தோட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி காபி தோட்டத்துக்குள் புகுந்தது.

அந்த யானை, காபி தோட்டத்தில் நடந்து சென்ற ஆயிஷாவை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயிஷா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் காட்டு யானை அவரை விடாமல் துரத்தியது.

காட்டு யானை தாக்கி சாவு

பின்னர் காட்டு யானை தும்பிக்கையால் ஆயிஷாவை தூக்கி வீசியது. மேலும் அவரை காலால் மிதித்தது. இதில் ஆயிஷா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் காட்டு யானை தாக்கி ஆயிஷா உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மால்தாரே உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

ஆனால் இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தாமதமாக வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் உயிரிழந்த ஆயிஷாவின் உடலை பார்வையிட்டனர்.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு திடீரென்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் நிரந்தரமாக காட்டு யானை அட்டகாசம் இருந்து வருகிறது.

காட்டு யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்தாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வனத்துறையினர் பலியான ஆயிஷாவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும், காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸ் விசாரணை

அதனைதொடர்ந்து போலீசார், யானை தாக்கி பலியான ஆயிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்