< Back
தேசிய செய்திகள்
சிறுத்தை தாக்கி பெண் சாவு; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
தேசிய செய்திகள்

சிறுத்தை தாக்கி பெண் சாவு; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
24 Aug 2022 8:24 PM IST

தாவணகெரே அருகே சிறுத்தை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவமொக்கா;

பெண் தொழிலாளி

தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா பலவனஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள மாடு, ஆடு மற்றும் வளா்ப்பு பிராணியான நாயை அடித்து கொன்று வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான கமலிபாய்(வயது 45) என்பவர் வனப்பகுதியின் அருகே உள்ள வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரைதேடி வயலுக்குள் புகுந்துள்ளது.

பரிதாப சாவு

சிறுத்தையை பாா்த்து அதிர்ச்சி அடைந்த கமலிபாய் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட சிறுத்தை அவரை துரத்தி பிடித்து கழுத்தில் கடித்து குதறியது. இதில் சிறுத்தை கடித்ததில் கமலிபாய் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சத்தம்கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தனர்.

இதற்கிடையே சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுபற்றி வனத்துறையினருக்கும், நியாமதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கமலிபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


கிராம மக்கள் பீதி

இதற்கிடையே கிராம மக்கள் வனத்துைற அதிகாரிகளிடம் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

சிறுத்தை தாக்கி பெண் பலியானதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்