மராட்டியம்: 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!
|மராட்டியத்தில் 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர்,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து 3 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வசாய் நகரில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காலை 7 மணியளவில் தன்னுடைய மூத்த மகனை பள்ளி பேருந்தில் அனுப்பி வைப்பதற்காக தாய் சென்ற போது, இளைய மகளான ஸ்ரேயா மகாஜன் என்ற 3 வயது சிறுமி தூக்கத்திலிருந்து எழுந்து தாயைத் தேடியுள்ளாள்.
தாயைக் காணாமல் அவருடைய செல்போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுள்ளாள். அப்போது சிறுமியின் கைகளில் இருந்த செல்போன் நழுவி விழவே அதைப் பிடிக்க முயன்ற சிறுமி 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.