காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக கெலாட் நீடிக்க கூடாது: சச்சின் பைலட்
|காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் நீடிக்க கூடாது என கட்சி தலைமையிடத்தில் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலை நடத்துவது என கட்சி முடிவு செய்தது.
இதன்படி, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலுக்கான போட்டியில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் உள்ளனர். மணீஷ் திவாரி, கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றால் இரட்டை பதவியை பெற அவர் விருப்பமுடன் உள்ளார் என கூறப்படுகிறது. எனினும், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அவரது எதிரியாக கூறப்படும் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற கூடும் என்றும் கூறப்படுகிறது.
எனினும், கெலாட்டுக்கு ஆதரவாக அக்கட்சியின் 90 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஒரு வேளை பைலட் முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் சபாநாயகர் சி.பி. ஜோஷியிடம் அளித்து உள்ளனர். இது ராஜஸ்தான் அரசியலில் மற்றொரு திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சச்சின் பைலட், கட்சியின் தலைமையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்படி, ராஜஸ்தான் முதல்-மந்திரியாக உள்ள அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்து விட்டால், அதன்பின் அவர் முதல்-மந்திரியாக நீடிக்க கூடாது என்று பைலட் கூறியுள்ளார். கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைத்து கொண்டு வருவதும் கெலாட்டின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.