< Back
தேசிய செய்திகள்
ஐரோப்பியாவில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளது:  பிரதமர் மோடி பேச்சு
தேசிய செய்திகள்

ஐரோப்பியாவில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
25 Feb 2023 3:18 PM IST

இந்தியா மற்றும் ஜெர்மனியின் வலுவான உறவுகள், பரஸ்பரம் ஜனநாயக மதிப்புகளின் பகிர்தலை அடிப்படையாக கொண்டவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.



புதுடெல்லி,


இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு துறையில் கூட்டான ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.

அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இன்று இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, அவர் இன்று காலை டெல்லிக்கு வருகை தந்து உள்ளார்.

அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் வந்து உள்ளனர். இந்த பயணத்தில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்சுக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசினார்.

இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, ஐரோப்பிய பகுதியில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளதுடன், இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் வலுவான உறவுகள், பரஸ்பர நலன்களுக்கான ஜனநாயக மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் விசயங்களை அடிப்படையாக கொண்டவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இடையேயான உறவுகள் சிறந்த முறையில் மேம்பட்டு உள்ளன.

மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் பிரசாரங்களால், அனைத்து பிரிவுகளிலும் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்புகளின் மீது ஜெர்மனி கொண்ட ஆர்வங்களால் நாங்கள் ஊக்கமடைந்து உள்ளோம்.

இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளின் உறவானது, இரு நாடுகள் இடையேயான ஆழம் வாய்ந்த புரிதலை அடிப்படையாக கொண்டவை. வர்த்தக பரிமாற்ற வரலாற்றையும் நாம் கொண்டுள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய வர்த்தக உறவுக்கான நாடாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சந்திப்பில், இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்து பேசுகிறார்.

இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் இருதரப்பிலான தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் உரையாடுகின்றனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கு நாளை செல்ல இருக்கிறார்.

2-ம் உலக போருக்கு பின்னர் ஜெர்மனி மத்திய குடியரசு நாட்டுடன் தூதரக அளவிலான நட்புறவை மேற்கொண்ட முதல் நிலை நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பொதுவான ஜனநாயக கொள்கைகளின்படி இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவுடன் இணைந்து ஜெர்மனி ஆண்டுக்கு 1,300 கோடி யூரோ மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறது. அவற்றில் 90 சதவீதம் அளவுக்கு, இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் நோக்கங்களை கொண்டவை ஆகும்.

மேலும் செய்திகள்