'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு
|பெங்களூருவில் சாலையோர கடையில் மிளகாய் வாங்கிவிட்டு யு.பி.ஐ. மூலம் ஜெர்மனி மந்திரி பணம் செலுத்தினார். அத்துடன் அவர் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
பெங்களூரு-
பெங்களூருவில் சாலையோர கடையில் மிளகாய் வாங்கிவிட்டு யு.பி.ஐ. மூலம் ஜெர்மனி மந்திரி பணம் செலுத்தினார். அத்துடன் அவர் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஜி20 மாநாடு
ஜி20 நாடுகளின் சபை தலைமையை இந்தியா வகிக்கிறது. இந்த ஜி20 நாடுகள் சபையின் உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) டெல்லியில் நடக்கிறது. இதில் அந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த சபையின் பல்வேறு அளவிலான கூட்டங்கள் நாடு முழுவதும் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகத்தில் ஏற்கனவே நிதி, கலாசாரம் உள்ளிட்ட குழுக்களின் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் ஜி20 நாடுகளின் டிஜிட்டல் புத்தாக்க மாநாடு பெங்களூருவில் நடந்து வருகிறது.
இந்த டிஜிட்டல் மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி வால்கர் விஸ்சிங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் பெங்களூருவில் நடக்கும் ஜி20 டிஜிட்டல் மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஜெர்மனி மந்திரி பாராட்டு
இந்த நிலையில் நேற்று ஜெர்மனி மந்திரி வால்கர் விஸ்சிங், சாைலயோர காய்கறி கடையில் மிளகாய் வாங்கினார். பின்னர் மிளகாய் வாங்கியதற்கான பணம் ரூ.100-ஐ யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை மூலம் தனது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்து செலுத்தினார். யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தியது மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்ததாக கூறிய அவர், 'டிஜிட்டல்' இந்தியா திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
வால்கர் விஸ்சிங் சாலையோர கடையில் காய்கறி வாங்கியதையும், அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தியதையும் ஜெர்மனி தூதரகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.