காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று கூடுகிறது - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை...!
|நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின்போது கடந்த 13ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் எம்.பி.க்கள் இருக்கை பகுதிக்குள் குதித்தனர். மேலும், தாங்கள் வைத்திருந்த வண்ணப்புகை குண்டுகளை மக்களவைக்குள் வீசினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக நாடாளுமன்றத்தில் இருந்த எம்.பி.க்கள் அந்த இளைஞர்களை பிடித்து அவை காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று கூட உள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள மையவளாகத்தில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.