உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி
|இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார்.
புதுடெல்லி,
துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம். இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை முறியடித்தார்.
தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.
137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஒரு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நபர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை
இப்போது தரவரிசையில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.