< Back
தேசிய செய்திகள்
சுரங்கபாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு
தேசிய செய்திகள்

சுரங்கபாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு

தினத்தந்தி
|
18 Aug 2023 3:03 AM IST

தார்வார் அருகே சுரங்கப்பாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டு 18 மணி நேரம் மீட்பு பணி நடந்தது.

தார்வார்:-

சுரங்கப்பாதையில் சிக்கிய லாரி

தார்வாா் அருகே பேளூர் பகுதியில் புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எச்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கெண்டிருந்தது. அந்த டேங்கர் லாரி நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் பேளூர் அருகே தார்வார் ஐகோர்ட்டு கிளை பகுதியில் சர்வீஸ் சாலைக்கு சென்று சுரங்கப்பாதை வழியாக பாலத்தின் அந்த பகுதிக்கு செல்ல முயன்றது. அப்போது திடீரென்று அதன் மேல் பகுதி பாலத்தில் உரசியப்படி சிக்கி கொண்டது. மேலும் டேங்கரின் மூடியும் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

இதனால் டேங்கரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக லாரி டிரைவர், தார்வார் புறநகர் போலீசாருக்கும், எச்.பி. கியாஸ் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

மின் இணைப்பு துண்டிப்பு

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்தனர். மேலும் அங்கு மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அங்கிருந்த கடைகள், ஓட்டல்களை மூடினர். அந்தப்பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் எச்.பி. கியாஸ் நிறுவனத்தில் இருந்தும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இரவில் மீட்பு பணியில் பாதிக்கப்பட்டதால், பேளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார 5 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

18 மணி நேரம்..

டேங்கரில் 18 டன் கியாஸ் இருந்ததால் அதனை விரைவாக காலி செய்ய பெரிய சவாலாக இருந்தது. இதையடுத்து மற்றொரு காலி டேங்கர் அங்கு வரவழைக்கப்பட்டு, கியாஸ் நிரப்பப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணி வரை அங்கு மீட்பு பணி நடந்தது. சுமார் 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சுரங்க சாலையில் சிக்கிய டேங்கரில் இருந்து கியாஸ் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து சுரங்க சாலையில் சிக்கிய லாரியும் மீட்கப்பட்டது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கியாஸ் டேங்கர் லாரி டிரைவர் செய்த சிறிய தவறால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட இருந்தது. போலீசார் துரிதமாக செயல்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்