வெந்நீர் எந்திரத்தில் விஷவாயு கசிவு: குளியலறையில் மூச்சுத் திணறி தாயும், மகனும் பலி
|சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநகர்,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி டவுன் ஜோதிநகரை சேர்ந்தவர் ஷோபா (வயது 40). இவரது மகன் திலீப் (17). கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வீட்டில் உள்ள கீசர் எனப்படும் வெந்நீர் எந்திரத்தில் தண்ணீரை சூடாக்கி திலீப் குளித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் நேற்று காலையில் திலீப் வழக்கம்போல் வீட்டின் குளியல் அறைக்குள் சென்று கீசரை ஆன் செய்துள்ளான். ஆனால் நீண்ட நேரமாகியும் திலீப் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஷோபா, மகனை தேடி குளியல் அறைக்குள் சென்றார்.
அப்போது திலீப் மயங்கிய நிலையில் தரையில் கிடந்தான். உடனே ஷோபா தனது மகனை குளியல் அறையில் இருந்து வெளியே தூக்கி வந்தார். மேலும் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதற்கிடையே ஷோபாவுக்கும் மயக்கம் ஏற்பட்டது. உடனே பக்கத்து வீட்டினர் தாய், மகன் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து உடனடியாக மாகடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு குளியல் அறையில் இருந்த கீசர் எந்திரத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திலீப்பும், அவரது தாய் ஷோபாவும் அடுத்தடுத்து பலியானதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மாகடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.