அயோத்தி கோவில் கருவறையில் உள்ள பாலராமர் சிலைக்கு புனித நீரால் அபிஷேகம்
|5-ம் நாள் ஐதீக நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அயோத்தி,
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள நிலையில், 5-ம் நாளான நேற்று முக்கிய சடங்குகள் நடைபெற்றன. கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு, 81 குடங்களில் மூலிகை மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் ஊற்றப்பட்டு சிலை சுத்தப்படுத்தப்பட்டதாக தலைமை அர்ச்சகர் அருண்குமார் தீட்சித் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. 5-ம் நாள் ஐதீக நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இந்த பூஜைகளை லட்மிகாந்த் தீட்சித், அருண்குமார் தீட்சித், சுனில் தீட்சித், அசோக் வைதிக் தீட்சித், புருஷோத்தம் என்கிற ராஜேந்திர வைதிக் ஆகியோரைத் தவிர, மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள 121 அர்ச்சகர்கள் செய்தனர்.
முன்னதாக 4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட பால ராமர், வலது கையில் அம்பையும் இடதுகையில் வில்லையும் ஏந்தி நிற்கிறார். தலையில் தங்க கிரீடம் உள்ளது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.