சிறையில் கொசு தொல்லை: கொசுக்களை பிடித்து கோர்ட்டுக்கு கொண்டு வந்த பிரபல தாதா
|சிறையில் கொசு தொல்லை தாங்க முடியாததால் கொசுவலை அனுமதி கோரி பிரபல தாதா ஒருவர் கொசுக்களை பிடித்து கோர்ட்டுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாவூத் கூட்டாளி
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.
கொசுக்கள் அடங்கிய பாட்டில்...
அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.
"என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.
மனு தள்ளுபடி
ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.