அகமதாபாத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
|பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே புகுந்து அந்த பெண்ணை தாக்கி கட்டி போட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப் மற்றும் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றையும், காரையும் கொள்ளையடித்துள்ளனர். சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயதான வீட்டு பணிப்பெண்ணை கொள்ளை கும்பல் கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். அதன்பின்னர் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
செல்போன்கள் இல்லாததால் ஆதரவற்று தவித்த அந்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை கும்பல் பஞ்சாப் நோக்கி தப்பி செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது பஸ்சில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வாலிபர் உத்தரபிரதேசத்தையும், ஒரு வாலிபர் மத்திய பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 5 பேரும் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.