வை ராஜா வை...! சிவராத்திரி விழாவில் கேம்ப்ளிங்; பக்தர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
|ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரி விழாவில் சூதாட்ட போட்டி நடத்தி பக்தர்களிடம் ரூ.30 லட்சம் பணமோசடி நடந்துள்ளது.
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் கடிவுமேளா பகுதியில் ஸ்ரீதுர்கா போகேஷ்வரா ஷேத்ரா என்ற கோவில் அமைந்து உள்ளது. இதில், மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து உள்ளனர்.
கோவிலை சுற்றி, சூதாட்ட போட்டிகள் நடத்தும் ஸ்டால் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அமைத்த மோசடி கும்பல், சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் சூதாட்ட போட்டியில் கலந்து கொண்டால் அதற்கு பதிலாக அதிக தொகை கிடைக்கும் என ஆசையை தூண்டி உள்ளனர். கை ராஜா கை என்ற பெயரில் நடந்த இந்த சூதாட்டத்தில் பக்தர்கள் பலர் ஈடுபட்டு உள்ளனர்.
2 நாட்களாக நடந்த இந்த சூதாட்ட போட்டிக்காக 10 மேஜைகள் திறந்த வெளியில் அமைத்து, அந்த கும்பல் போட்டிகளை நடத்தி உள்ளது. இதில், ரூ.30 லட்சம் வரை பக்தர்கள் இழந்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதனை தடுக்காமல் உள்ளூர் நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது என பக்தர்கள் தற்போது குற்றச்சாட்டாக கூறுகின்றனர். இதற்காக அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சம் வரை லஞ்ச பணம் கைமாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அந்த பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளாக சூதாட்ட போட்டிகள் எதுவும் நடைபெறாமல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். ஆனால், இந்த வருடம் அதற்கான கடைகளை திறக்க அனுமதி அளித்து விட்டனர் என கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.