< Back
தேசிய செய்திகள்
அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்...!! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு
தேசிய செய்திகள்

அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்...!! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

தினத்தந்தி
|
23 Aug 2023 8:21 PM IST

நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் ஆற்றலை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளன. சமீபத்தில் ரஷியா அனுப்பிய விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்னரே நிலவில் மோதியது. இதனால், ரஷியாவின் திட்டம் தோல்வியடைந்தது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கி, சாதனை படைத்த உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, இஸ்ரோவுக்கு சமூக ஊடகத்தில் வாழ்த்துகள் குவிந்து விட்டன. தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கல வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்த தருணம் விலைமதிப்பற்றது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என அவர் குறிப்பிட்டார்.

நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் திறமையால் நிலவின் தென்துருவ பகுதியை இந்தியா அடைய முடிந்தது என்றும் அவர் கூறினார். வருங்காலத்தில் பிற நாடுகளும் நிலவுக்கு செல்லும் திட்டங்களுக்கு இது உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.

நாட்டின் மீது ஆர்வம் மற்றும் அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், சந்திரயான்-3 விண்கல வெற்றியை அடுத்து, ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும். செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இந்த திட்டம் செயல் வடிவம் பெறுவதற்கான இலக்கை கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களை கொண்டு சென்று, பின்பு அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் வகையில் ககன்யான் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின்போது நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்