டெல்லியில் நிறைவேற்றப்பட்ட ஜி-20 மாநாட்டு கூட்டு பிரகடனத்துக்கு சீனா பாராட்டு
|டெல்லியில் நிறைவேற்றப்பட்ட ஜி-20 மாநாட்டு கூட்டு பிரகடனத்துக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
பீஜிங்,
டெல்லியில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பெரும் சவால்களை கடந்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த முடிவுடன் கூட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், 'ஜி-20 மாநாடு தலைவர்களின் பிரகடனம் ஒன்றை ஏற்றுக் கொண்டது. இது சீனாவின் பரிந்துரைகளை பிரதிபலிப்பதுடன், உறுதியான வழிகளில் கூட்டமைப்பு செயல்படும் என்றும் கூறுகிறது. உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதற்கும் உலகப் பொருளாதார மீட்சி மற்றும் உலகளாவிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இணைந்து செயல்படுவதற்குமான நேர்மறையான சிக்னலை இது கொடுக்கிறது' என்று தெரிவித்தார்.
மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகளில் சீனா ஆக்கப்பூர்வ பங்களிப்பை நல்கியதாக கூறிய நிங், வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், சிறந்த பலன்களை அடைவதிலும் சீனா எப்போதும் ஆதரவுடன் இருந்து வருவதாகவும் கூறினார்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட சீன பிரதமர் லீ கியாங், ஜி-20 அமைப்பின் ஒத்துழைப்புக்கான பரிந்துரைகளை வழங்கியதாகவும் மாவோ நிங் தெரிவித்தார்.