< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் ஜி20 மாநாடு; சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பாரா?
தேசிய செய்திகள்

டெல்லியில் ஜி20 மாநாடு; சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பாரா?

தினத்தந்தி
|
31 Aug 2023 11:58 PM IST

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ஜின் பிங் கலந்துகொள்வதை சீனா இன்னும் உறுதி செய்யவில்லை.

உலகில் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்று ஜி20. இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மாநாட்டில் பெரும்பாலான ஜி20 தலைவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்து உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பான்சி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஆகியோர் கலந்து கொள்வதை ஏற்கனவே உறுதிசெய்து உள்ளனர்.

ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் பங்கேற்கமாட்டார் என ரஷிய அதிபர் மாளிகை கிரெம்ளின் தெரிவித்து விட்டது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங் கலந்துகொள்வதை இதுவரை அந்தநாடு உறுதி செய்யவில்லை. இந்த மாநாட்டை ஜின் பிங் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் சார்பில் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியா மற்றும் சீனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது ஜி20 மாநாட்டில் சீன தலைவர்கள் கலந்து கொள்ளும் விவரம் எதுவும் தன்னிடம் இல்லை என கூறி உள்ளார்.

2020-ம் ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் இந்தியா-சீனா இடையே வலுவான எல்லை பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சினையையடுத்து இரு தரப்பிலும் தொடர் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல சமீபத்தில் சீனா வெளியிட்டிருந்த வரைபடமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை சீனா தனது பகுதிகளாக காட்டி இருந்தது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மேலும் செய்திகள்