< Back
தேசிய செய்திகள்
ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
10 Sept 2023 12:01 AM IST

டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் அரசு மறைக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மறைக்கத்தேவையில்லை

தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம் நாட்டின் உண்மைநிலையை நமது விருந்தினர்களிடம் மறைக்கத்தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

குடிசைகள் இடிப்பு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஆக்கப்பூர்வ கூடலாக இருக்க வேண்டும், உலக பிரச்சினைகளை ஒத்துழைப்போடு கையாள வேண்டும் என்பதே ஜி-20 மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் வராமல் இருக்கலாம். இளவரசர் பொடம்கினின் (முன்னாள் ரஷிய ராணுவ தலைவர். பிரதமர் மோடியை இவ்வாறு குறிப்பிடுகிறார்) கைங்கரியம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகள் துணிகளை கட்டி மூடி மறைக்கப்பட்டுள்ளன அல்லது இடித்து தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வீடு இழந்துள்ளனர். தெருநாய்கள் போன்றவை குரூரமாக சுற்றிவளைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றன. பிரதமர் மோடியின் மதிப்பை மெருகேற்றுவதற்கே இவ்வாறு செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

பூச்சிகளைப் போல...

டெல்லியில் குடிசைப்பகுதிகள் துணியை கட்டி மறைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியையும், தெருநாய்கள் போன்றவை பிடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சியையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

மேலும் ஒரு வீடியோவில், 'அரசு எங்களை பூச்சிகளைப் போல கருதுகிறது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?' என்று ஒரு குடிசைவாசி கேள்வி கேட்பது இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்