< Back
தேசிய செய்திகள்
ஜி20 நாடுகளின் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது
தேசிய செய்திகள்

ஜி20 நாடுகளின் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

தினத்தந்தி
|
14 Dec 2022 12:15 AM IST

ஜி20 நாடுகள் சபையின் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இதில் நிதி, மத்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பெங்களூரு:

தலைமை பதவி

ஜி20 நாடுகள் சபையில் இந்தியா அங்கம் வகிக்கிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடம் பெற்றுள்ளன. நடப்பு ஆண்டில் ஜி20 நாடுகள் சபையின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தலைமை பதவியை இந்தியா கடந்த 1-ந் தேதி முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த நாடுகளின் பல்வேறு மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொள்ளும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.

நிதியியல் கட்டமைப்பு

இந்த 200 கூட்டங்களில் 14 கூட்டங்கள் கர்நாடகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜி20 நாடுகள் சபையின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் தேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பாத்ரா மற்றும் ஜி20 நாடுகளின் நிதித்துறை உயர் அதிகாரிகள், மத்திய வங்கிகளின் துணை கவர்னர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் உலக பொருளாதார பிரச்சினைகள், உலக பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள நிலைகள், சர்வதேச நிதியியல் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதி, நிலையான நிதி, உலக சுகாதாரம், சர்வதேச வரி விதிப்பு முறைகள், நிதி உள்ளடக்கம் உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நிதி நிறுவனங்கள் 21-வது நூற்றாண்டில் எழுந்துள்ள உலக சவால்கள், எதிர்கால நகரங்களுக்கு நிதி வழங்குதல், உலக கடன் நிலை பாதிப்புகள், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், உற்பத்தியின் பலன்கள், காலநிலை திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல், கிரிப்டோ கரன்சி பிரச்சினைகளை ஒருங்கிணைந்து அணுகுதல், சர்வதேச வரி விதிப்பு அம்சத்தை மேம்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன.

சவால்களுக்கு தீர்வு

இந்த கூட்டத்தில் 21-வது நூற்றாண்டில் எழுந்துள்ள உலக சவால்களுக்கு தீர்வு காண பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை பலப்படுத்துதல், பசுமை நிதி அளித்தலில் மத்திய வங்கிகளின் பங்கு குறித்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக 40 கூட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.

இதில் அடுத்தடுத்த கடடத்தில் அந்த நாடுகளின் நிதி மந்திரிகள், மத்திய வங்கிகளின் கவர்னர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களை அமல்படுத்துவது குறித்து ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் நடத்த திட்டமிட்டுள்ள 14 கூட்டங்களில் பெங்களூருவில் 11 கூட்டங்களும், மைசூருவில் ஒரு கூட்டமும், வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஹம்பியில் 2 கூட்டங்களும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்