ஜி-20 உச்சி மாநாடு; உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை: ஸ்பெயின் துணை அதிபர்
|பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை என ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஸ்பெயின் துணை அதிபர் நாடியா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக மாநாட்டுக்கு வந்தடைந்தனர்.
அவர்களை பிரதமர் மோடி சிறப்பாக வரவேற்றார். இந்த உச்சி மாநாட்டில் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதுபற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வெளியே வந்த ஸ்பெயின் நாட்டின் துணை அதிபர் நாடியா கால்வினோ செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக, ஒத்துழைப்புடனும் ஒன்றிணைந்தும் பணியாற்றுவதற்கான நம்முடைய கூட்டு திறனில் பன்முக தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்காக ஒரு கூடுதலான ஆற்றல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நடந்த ஆலோசனையானது, இந்த தேவையை மையப்படுத்தியும் மற்றும் ஜி-20 கூட்டத்தில் இணையும், ஐரோப்பிய யூனியனை வரவேற்கும் வகையிலும் இருந்தது என கூறியுள்ளார்.
பாரீஸ் மற்றும் வெவ்வேறு சர்வதேச உச்சி மாநாடுகளில் உருவான உள்ளார்ந்த ஈடுபாடுகளை முழுமையடைய செய்வதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தமும் உள்ளது. வரவிருக்கிற பருவநிலை மாற்றத்திற்கான 28-வது மாநாட்டில் பங்காற்றுவதற்கு ஒரு கூட்டு பொறுப்பும் நமக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் எதிரொலியாக கடந்த ஆண்டில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்தன. வெப்ப அலை பரவல், காட்டுத்தீ போன்ற சவால்களையும் எதிர்கொண்டன.
இதில், வெப்ப அலை பாதிப்புக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் மட்டுமே ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டில் உயிரிழந்தனர். இதன் பாதிப்பில் இருந்து அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர்.