< Back
தேசிய செய்திகள்
ஜி-20 மாநாடு; கொல்கத்தாவில் மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் வெளிநாட்டு குழுவுக்கு வரவேற்பு
தேசிய செய்திகள்

ஜி-20 மாநாடு; கொல்கத்தாவில் மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் வெளிநாட்டு குழுவுக்கு வரவேற்பு

தினத்தந்தி
|
9 Jan 2023 7:41 AM IST

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் வெளிநாட்டு குழுவினருக்கு மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.


கொல்கத்தா,


'ஜி-20' என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது. இதன்பின்பு, ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்று கொண்டார்.

இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, நமது நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடியுள்ள தருணத்தில் 'ஜி-20' அமைப்புக்கு தலைமை ஏற்பது பெருமைக்குரியது. இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றது. இதன்பின் இந்தியாவில் ஜி-20 தலைமைத்துவத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமுடன் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதனையொட்டி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாடு முதன்முறையாக நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாட்டு குழுவினர் இன்று அந்நகருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு, மேளதாளங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் வழியெங்கும் வரவேற்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் இந்த மாநாடு இன்று தொடங்கி வருகிற 11-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்