ஜி-20 மாநாடு: டெல்லி நகர அழகு பணிக்காக பள்ளி தரைமட்டம்; நிர்கதியான ஏழை மாணவர்கள்
|டெல்லியில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தும் பணிக்காக பள்ளி இடித்து தள்ளப்பட்டதில் 35 ஏழை மாணவர்கள் நிர்கதியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் பல பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு படையினர் உதவியுடன் பொது பணி துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரகதி மைதான் பகுதிக்கு முன் அமைந்து இருந்த பள்ளிக்கூடம் ஒன்றை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.
அந்த இடத்தில் கடந்த 9 ஆண்டுகளாக அந்த பள்ளி செயல்பட்டு வந்து உள்ளது. நீத்து என்ற சமூக சேவகர், சப் கி பாத்சாலா என்ற பெயரில் தற்காலிக பள்ளிக்கூடம் ஒன்றை அமைத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வந்து உள்ளார்.
இதுபற்றி நீத்து கூறும்போது, கடந்த ஜனவரி 28-ந்தேதி இடம் காலி செய்யும்படி குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ் வந்தது. அவர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றும் பலனில்லை. மே 31-ந்தேதி வரை அவர்கள் காலி செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டது.
கோர்ட்டு உத்தரவின்படி, அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், கோசாலை மற்றும் கோயிலை அதிகாரிகள் ஒன்றும் செய்ய கூடாது என கூறப்பட்டது. ஆனால், கோசாலை மற்றும் கோயிலை விட்டு விட்டு, பள்ளிக்கூடம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது என வேதனை தெரிவித்து உள்ளார்.
நன்கொடைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் இந்த பள்ளியை நடத்தி வந்தேன் என அவர் கூறுகிறார்.
அந்த பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான கூலி வேலைக்கு செல்லும் ஷீலா கூறும்போது, எனது குடிசை பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஆனால், எனது குழந்தைகளின் வருங்காலம் பற்றி வருந்துகிறேன்.
இந்த பள்ளியில் அவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்றனர் என கூறியுள்ளார். பள்ளியில் 10 ஆண்டுகளாக படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி கவிதா கூறும்போது, நான் பள்ளியில் கலை, நடனம், போஸ்டர் தயாரித்தல், தோட்டக்கலை உள்ளிட்ட பல திறமைகளை இந்த இடத்தில் கற்று கொண்டேன்.
ஆனால் தற்போது இடிபாடுகளே மீந்துள்ளது என கூறுகிறார். 4-ம் வகுப்பில் சேர்ந்து தற்போது 11-ம் வகுப்பு படிக்கும் தேவ் என்ற மாணவர், நான் எனது 2 வீடுகளையும் இழந்து விட்டேன்.
ஒன்று நான் வசித்து வந்த வீடு. மற்றொன்று பள்ளி முடிந்த பின்பு நேரம் செலவிட பயன்பட்ட இந்த பள்ளிக்கூடம் என்று கூறியுள்ளார். இந்த பள்ளியில் இருந்து அவர் கலைகளை கற்று வந்துள்ளார்.