ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசல் அலங்கரிப்பு
|ஜும்மா பள்ளிவாசலில் ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலக வல்லரசுகள் உள்பட முக்கியமான நாடுகளின் தலைவர்களை ஒரே நேரத்தில் வரவேற்கும் இந்திய அரசு, இதற்காக தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசலில், ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான மலர்கள் மற்றும் விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.