< Back
தேசிய செய்திகள்
ஜி-20 மாநாடு: போலீஸ் கட்டுப்பாட்டில் தலைநகர் டெல்லி - வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்கு தடை
தேசிய செய்திகள்

ஜி-20 மாநாடு: போலீஸ் கட்டுப்பாட்டில் தலைநகர் டெல்லி - வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
7 Sept 2023 6:23 AM IST

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு புதுடெல்லி போலீஸ் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வரப்பட்டது. வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்கு தடையும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

உலக பொருளாதாரத்தை வழிநடத்தும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஓராண்டாக டெல்லியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபம் என்ற பெயரில் புதிய மண்டபம் கட்டப்பட்டது. மண்டபத்தின் முகப்பில் தமிழ்நாட்டின் நடராஜர் சிலை நிறுவப்பட்டு விட்டது.

டெல்லியின் முக்கியமான ரோடுகள் எல்லாம் பலவண்ண பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, மாநாட்டுக்கான நாளும் நெருங்கிவிட்டது. மாநாட்டுக்கு இன்னும் ஒருநாள் தான் பாக்கி உள்ளது.

இந்த நிலையில் மாநாடு நடைபெறும் புதுடெல்லியை டெல்லி காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. புதுடெல்லி மாவட்டத்துக்குள் வெளிநாட்டு தலைவர்கள் வந்து தங்கும் ஓட்டல்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. அந்த ஓட்டலின் நுழைவு வாயில்கள் முன் உள்ள ரோடுகள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதைப்போல மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

புதுடெல்லி மாவட்டத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த ரெயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மாநாட்டையொட்டி நாளை, நாளை மறுநாள் மற்றும் 10-ந்தேதி ஆகிய 3 நாட்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கையாளப்படுகிறது. இந்த 3 நாட்களும் மாநகரம் முழுவதும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு, பட்டேல் சவுக், ஆர்.கே.ஆஸ்ரம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பல இடங்களையும் சுற்றிப் பார்ப்பார்கள் என்பதால் இந்த 3 நாட்களும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி மாவட்டத்துக்குள் எந்த வணிக நிறுவனங்களும் செயல்படாது. உணவு வினியோகம் உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரம் எதுவும் நடைபெறாது.

டெல்லி மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பிக்னிக் என மன ஆறுதலுக்காக வந்து செல்லும் இடமும், சுற்றுலா பயணிகளின் வருகைத்தளமுமான கடமைப்பாதைக்கு இந்த 3 நாட்களில் யாருக்கும் அனுமதி இல்லை. யாரும் வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த 3 நாட்களும் விமான பயணம் மற்றும் ரெயில் பயணத்துக்காக திட்டமிட்டு இருப்பவர்கள் போக்குவரத்து ஆலோசனைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் 10-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்