நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியை சார்ந்து உள்ளது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
|நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியை சார்ந்து உள்ளது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று 'மை ஹோம் இந்தியா' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது:-
எந்த ஒரு நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் அந்நாட்டின் இளைஞர்களே. இளைஞர்களின் திறமையே ஒரு நாட்டைப் பெருமைப்படுத்துவதில் சிறப்புப் பங்கு வகிக்கின்றது. உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியாவாகும். இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் முயற்சி மற்றும் உறுதியைச் சார்ந்தே உள்ளது. நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது. பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இன்றைய காலகட்டம் சிறப்பு வாய்ந்தது. தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் மட்டுமே இளைஞர்களை மேலே கொண்டு செல்ல முடியும். இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவராக மாறாமல், தங்களது திறமையாலும் கடின உழைப்பாலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்தளமிட்டுள்ளனர் என்பது நம் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் என்றும் அவர் கூறினார்.