இந்தியா முழுவதும் ராமர் மயமாகி இருக்கிறது - எல்.கே.அத்வானி
|வருகிற 22-ந் தேதி ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, மகத்தான நமது பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துவார் என எல்.கே.அத்வானி கூறினார்.
புதுடெல்லி,
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நெருங்கி வரும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் ராமர் மயமாகி இருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்காக அயோத்தியில் கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுவதற்காக ரத யாத்திரை, ராமஜென்மபூமி இயக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.
இந்த விழாவை முன்னிட்டு, 'ராமர் கோவில்: ஒரு புனிதமான கனவை நிறைவேற்றுதல்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டு நவம்பரில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உறுதியான தீர்ப்பின் காரணமாக, அமைதியான சூழலில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பு மிக்க இந்த கோவிலின் கட்டுமானப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் எனது யாத்திரையில் பங்கேற்ற எண்ணற்ற சாதுக்கள், தலைவர்கள், கரசேவகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அயோத்தியில் ராமருக்கு என்றோ ஒரு நாள் நிச்சயம் கோவில் கட்டப்படும் எனவும், அது காலத்தின் தேவை என்றும் உணர்ந்தேன். அதற்காக தொடங்கப்பட்ட ராமஜென்மபூமி இயக்கம், நாடு விடுதலைக்கு பின் ஒரு முக்கியமான இயக்கமாக இருந்தது.
ஒருபுறம் இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தது. மறுபுறம் வாக்கு வங்கி அரசியலுக்காக பெரும்பாலான கட்சிகள் அதை ஆதரிப்பதில் இருந்து பின்வாங்கின. இதை மதசார்பின்மை என்ற பெயரில் நியாயப்படுத்தினார்கள்.
எனவே, ராமர் கோவில் கட்டுவதை முதன்மை நோக்கமாக கொண்ட ராமஜென்மபூமி இயக்கம், போலி மதசார்பின்மையின் தாக்குதலில் இருந்து மதசார்பின்மையின் உண்மையான அர்த்தத்தை மீட்டெடுப்பதற்கான அடையாளமாகவும் மாறியது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நாடு முழுவதும் ராமர் மயமாகி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாவின் பெருமைக்குரிய உறுப்பினராக மட்டுமின்றி, இந்தியாவின் பெருமைக்குரிய குடிமகனாகவும் இது எனக்கு நிறைவின் தருணம். என் வாழ்நாளில் சிறப்புமிக்க இந்த வரலாற்று நிகழ்வை காண்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன்.
வருகிற 22-ந் தேதி ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, மகத்தான நமது பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துவார். இந்த புனிதமான தருணத்தில் 2 பேர் இல்லாததை நினைத்து வருந்துகிறேன். முதல் நபர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். பரஸ்பர நம்பிக்கை, பாசம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் பிரிக்க முடியாத மற்றும் நிரந்தரமான பிணைப்பு அது.
2-வது நபர் எனது மனைவி கமலா. ரத யாத்திரையின்போது மட்டுமின்றி, பொது வாழ்விலும் எனது நிலைத்தன்மையின் முக்கிய ஆதாரமாகவும், ஈடு இணையற்ற வலிமையாகவும் இருந்தவர் அவர்.
இவ்வாறு எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.