தப்பியோடிய அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி கைது
|காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்குடன் தப்பியோடிய அவரின் நெருங்கிய கூட்டாளி பாப்பல்பிரீத் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரிவினைவாதிகள் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டுவரும் காலிஸ்தான் ஆதரவாளரும், வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி, போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத்-உடன் இருந்துள்ளதாக தகவல் வெளியானது.
பஞ்சாப் காவல்துறை மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பலத்த தேடுதல் வேட்டைக்குப்பிறகு, காலிஸ்தானி ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் பப்பல்பிரீத் சிங் ஹோஷியார்பூரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜலந்தரில் பஞ்சாப் காவல்துறையின் வலையில் இருந்து தப்பியோடிய, 22 நாட்களுக்கு பிறகு போலீசாரால் பப்பல்பிரீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கை குறித்து தெரிவித்த காவல்துறை, பப்பல்பிரீத் சிங் ஏற்கனவே 6 வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாகவும், சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. பப்பல்பிரீத் சிங் மீது மாநில காவல்துறை, இதற்கு முன்பாகவும் இரண்டு முறை வழக்கு பதிவுசெய்துள்ளது.