பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங் கைது - பஞ்சாப் போலீஸ் அதிரடி
|பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்து உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த விவகாரத்தில் போலீசார் தனிப்படை அமைத்து அம்ரித்பால் சிங்கை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வகுப்புகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், கொலை முயற்சி, காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்கள் கடமையை செய்ய இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.