திருமணம் ஆகாததால் விரக்தி: தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை
|திருமணம் ஆகாததால் விரக்தியில் தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா உண்கல் பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் தேவேந்திரப்பா. அவரது மகன் பரத்வாடா (வயது 22). இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான வரன் அமையவில்லை என தெரிகிறது.
இதனால் பரத்வாடா மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததற்கு தகராறு செய்துள்ளார் .
பின்னர் வீட்டில் இருந்து பரத்வாடா வெளியே சென்றுள்ளார். அவரது தந்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது பரத்வாடா அதே பகுதியில் உள்ள ஏரியில் குதித்து தற்ெகாலை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அவரை, தேவேந்திரப்பா தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கைகூப்பி கேட்டுள்ளார்.
ஆனால் பரத்வாடா தனது தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வித்யாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரப்பர் படகுகள் மூலம் ஏரியில் தேடிபாா்த்தனர்.
பின்னர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஏரியில் இருந்து பரத்வாடாவை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.