< Back
தேசிய செய்திகள்
சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை... 2,976 ஆபாச வீடியோக்கள்; ரேவண்ணா வழக்கின் பின்னணி என்ன?
தேசிய செய்திகள்

சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை... 2,976 ஆபாச வீடியோக்கள்; ரேவண்ணா வழக்கின் பின்னணி என்ன?

தினத்தந்தி
|
30 April 2024 2:07 PM IST

பிரஜ்வால் ரேவண்ணா தன்னுடைய மொபைல் போனில் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, பல வீடியோக்களை பதிவு செய்து பின்னர், லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வால், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய தேர்தலின்போது ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் ஹாசன் நகர் முழுவதும் பரவின. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு ரேவண்ணா தப்பி சென்று விட்டார்.

பிரஜ்வால், 2014-ம் ஆண்டு பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பை படித்திருக்கிறார். 2019-ம் ஆண்டில் கட்சியின் மாநில பொது செயலாளரானார். 2019 மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.பி.யானார். கட்சியில் மெல்ல வளர்ச்சியடைந்த அவருக்கு, நடப்பு மக்களவை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடந்தபோது, வாக்காளர்களிடையே இவை பரவின. இவற்றில் பல வீடியோக்களை பிரஜ்வாலே தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பின்னர், அவற்றை லேப்டாப்புக்கு அவர் மாற்றியுள்ளார்.

இதில் பல வீடியோக்களை அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து பதிவு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முதலில், இந்த வீடியோக்கள் எல்லாம் போலியாக சித்தரிக்கப்பட்டவை என கவுடாவின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க.வினர் கூறி வந்தனர். தேர்தலில் கவுடா குடும்பத்தினருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முயற்சியிது என்றும் கூறப்பட்டது.

ஆனால் பின்னர், போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர் என கூறி குமாரசாமி சர்ச்சையில் இருந்து விலகி கொண்டார். கர்நாடக போலீசார் கூறும்போது, பென் டிரைவ் ஒன்றில் 2,976 வீடியோக்கள் இருந்தன. அதில், சில வீடியோக்கள் ஒரு சில வினாடிகளும், சில வீடியோக்கள் குறைந்த நிமிடங்கள் ஓட கூடிய வகையிலும் இருந்தன என கூறினர்.

இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டுக்கு பின்னர் பெங்களூரு மற்றும் ஹாசன் நகரில் உள்ள அவர்களுடைய வீட்டில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைத்து மொபைல் போனில் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது.

எனினும், அவற்றின் உண்மை தன்மை பற்றி அறிய, சில பென் டிரைவ்களை தடய அறிவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ஹாசனில் உள்ள வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அளித்த புகாரில், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேவகவுடாவின் மூத்த மகனான எச்.டி. ரேவண்ணா, இளைய மகனான எச்.டி. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின்போது மந்திரியாக இருந்தவர். 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணா அடிக்கடி தன்னை அவருடைய வீட்டுக்கு கூப்பிட்டார் என புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த புகாரில், ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போது அந்த பெண்ணை அழைத்து கொண்டு, சேமிப்பு அறைக்கு சென்று விடுவார். இதன்பின்பு பழங்களை தரும் சாக்கில் பல இடங்களில் தொட்டார். சேலை உள்ளிட்ட ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் பேரில், 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்று விட்டோம் என சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்