ஒடிசாவில் இருந்து மைசூருவுக்கு ரூ.2½ லட்சம் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
|ஒடிசாவில் இருந்து மைசூருவுக்கு ரூ.2½ லட்சம் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு-
மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மைசூரு டவுன் மகாதேவபுரா பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு நின்ற 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அங்கிருந்து மைசூருவுக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், 6 கிலோ 520 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து ேபாலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ.2.60 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.