< Back
தேசிய செய்திகள்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15¼ லட்சம் தங்கம் சிக்கியது
தேசிய செய்திகள்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15¼ லட்சம் தங்கம் சிக்கியது

தினத்தந்தி
|
26 Sept 2022 11:30 AM IST

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.15¼ லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடா்பாக பண்ட்வாலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு;

சர்வதேச விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் போலீசார், மத்திய தொழில்நுட்ப அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் சுங்க வரித்துறையினர் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கடத்தி வரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.

தங்கம் கடத்தல்

அதுபோல் நேற்றுமுன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் இரவு மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரிடம் அதிகாரிகள் தீவிரமான சோதனை நடத்தினர். அதில் அவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

ரூ.15¼ லட்சம் தங்கம்

இதில் அவர் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் துபாயில் இருந்த மங்களூருவுக்கு தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 306 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை விமான நிலைய போலீசில், சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைதானவர் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்