உத்தரப்பிரதேசத்தில் மழை பெய்ய வேண்டி தவளைக்குத் திருமணம் செய்து வைத்து சிறப்பு பூஜை..!
|உத்தரப்பிரதேசத்தில் மழை பெய்ய வேண்டி தவளைக்குத் திருமணம் செய்து வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
கோரக்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், பருவமழை பெய்ய வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. கோரக்பூரில் உள்ள காளிபாரி கோவிலில் நேற்று நடைபெற்ற விழாவில் தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்பான இந்து மகாசங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு சடங்கை காண மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுகுறித்து இந்து மகாசங்கத்தைச் சேர்ந்த ரமாகாந்த் வர்மா கூறும்போது:-
இங்கு தற்போது வறண்ட சூழல் நிலவுகிறது. சாவான் (இந்து காலண்டரில் ஒரு மாதம்) மாதத்தின் ஐந்து நாட்கள் ஏற்கனவே கடந்த நிலையிலும் இதுவரை பருவமழை பெய்யவில்லை. எனவே மழை பெய்ய வேண்டி கடந்த வாரம் ஹவான் பூஜை செய்தோம். இப்போது தவளைகளுக்கு திருமணம் செய்துள்ளோம். இந்த சடங்கு நிச்சயமாக பலனளிக்கும். கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த சடங்கு நிச்சயமாக பலனளிக்கும் என்றும், வெப்பத்தில் இருந்து விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும் சடங்கை காண வந்த மக்கள் தெரிவித்தனர்.