காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது தேர்தல் நடத்தை விதிமீறல்-சச்சின் பைலட்
|பாஜகவின் இந்த ஆக்கிரமிப்பு அரசியலை தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சச்சின் பைலட் கூறினார்.
புதுடெல்லி,
தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து முடக்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட் கூறியதாவது: " வங்கிக் கணக்குகளை முடக்குவதாக இருப்பின், தேர்தல் பத்திர மோசடி மூலம் பெரும் தொகையை குவித்திருக்கும் பாஜகவின் கணக்குகளைத்தான் முடக்க வேண்டும். தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைப்பது, அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது போன்றவை தேர்தல் நடத்தை விதிகள் மற்றுமன்றி, அடிப்படை அறநெறிகளையும், அரசியலமைப்பு சட்டங்களையும் மீறுவதாகும். மேலும் இவை ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். பாஜகவின் இந்த ஆக்கிரமிப்பு அரசியலை தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார்.