நக்சலைட்டு தலைவரின் அசையா சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ. அதிரடி
|நக்சலைட்டு தலைவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
ஜார்க்கண்டின் லத்திஹார் மாவட்டத்தில் சந்த்வா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்ஜிதோலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் கஞ்சு. நக்சலைட்டு தலைவராக அந்த பகுதியில் செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால், இவரை பிடித்து தருபவருக்கு அல்லது தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், லத்திஹார் மாவட்டத்தில் உள்ள கஞ்சுவின் அசையா சொத்துகளில் ஒன்றான வீடு ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இந்த வழக்கில், நக்சல் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்தும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இந்த வீட்டை உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டுதல் மற்றும் சட்டவிரோத வசூல் உள்ளிட்டவற்றில் கிடைத்த நிதியை கொண்டு கட்டியுள்ளார் என விசாரணை முடிவு தெரிவிக்கின்றது.