< Back
தேசிய செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
தேசிய செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

கோலார் தங்கவயலில் தூய்மை பணியாளர்களுக்கு நகரசபை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கோலார் தங்கவயல்

தூய்மை பணியாளர்கள்

கோலார் தங்கவயல் நகரசபைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை எந்தவிதமான மருத்துவ பரிசோதனை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் நகரசபை புதிய கமிஷனராக பவன்குமார் பதவி ஏற்றுள்ளார்.

அவரிடம் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நகரசபை கமிஷனர் பவன்குமார், நகரசபை ஊழியர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நகரசபை வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

பாதுகாப்பு உபகரணம்

அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஏதேனும் பாதுகாப்பு உபகரணம், வேண்டும் என்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் ஊதியம் வழங்குவதில் பிரச்சினை இருந்தால் உடனே நகரசபை நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று பவன்குமார் கூறினார்.

இதற்கிடையில் இந்த மருத்துவ பரிசோதனை முகாம் குறித்து கோலார் தங்கவயலை சேர்ந்த மக்கள் சிலருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் என்பதால், நேரில் வந்து, உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நகரசபை நிர்வாகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்