ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம் ! அசோக் கெலட் அதிரடி அறிவிப்பு !!
|ஏற்கனவே கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது !!
ஜெய்ப்பூர்,
கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அறிவித்த இலவச மின்சார அறிவிப்பு, அந்த மாநிலத்தில் வெற்றி பெற பெரிதும் உதவியது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் முதல் 100 யூனிட் இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்
* மாதம் 100 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை, மேலும் மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், அதாவது எவ்வளவு பில் வந்தாலும் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
* குறிப்பாக மாதத்திற்கு 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்தும் நடுத்தர மக்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம், 200 யூனிட் வரை நிலையான கட்டணங்கள் வசூலிக்கப்படும். எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்.
என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே காஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டு அவற்றிற்கு வழங்கப்படும் மானியம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.